கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் போர் நடாத்திவந்த சிறீலங்கா அரசாங்கமானது உலக நாடுகள் முழுவதிலும் கடன் வாங்கிய கடனாளியாக நிற்கின்றது. பெரும் தொகைப் பணத்தினை போரிலே கொட்டிக் குவித்த அரசு அந்நியச் செலவாணியைப் பெறுவதில் பெரும் சிக்கல்களைக் கண்டு வந்திருந்தது.
போர்ச்சூழலால் சுற்றுலாத்துறையும் நெருக்கடியில் இருந்ததனால் இச் சிக்கல் மேலும் அதிகரித்திருந்தது. இருந்த போதிலும் புலம் பெயர்ந்து கணிசமான அளவில் வெளிநாடுகளில் குடியேறிய தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தங்கள் உறவினர்களிற்கு அனுப்பும் பணங்களின் மூலம் சிறிது வருவாயினைப் பெற்றுக்கொண்டுள்ளது.
அதைப் போலவே இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் ஆரம்பித்த வியாபார நிறுவனங்களிற்குத் தேவையான பொருட்களை சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் சிறீலங்கா அரசானது தனது பொருளாதாரத் தேவையை ஓரளவு பெற்றுவந்தது. இதில் பெரும்பான்மையான நிதிவளமானது தமிழர்கள் மூலமாகவே சிறீலங்கா அரசிற்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குச் செலவளிக்கும் நிதியின் பகுதியைத் தமிழர்களிடமே இருந்து சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.
இக்காலப்பகுதியில் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பன தமிழ் மக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் விரும்பி வாங்கப்பட்டிருந்தன.
பின்னர் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியினால் சிறீலங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது சிறீலங்காவிற்கு வருவாய் அளிக்கும் பொருட்கள் விற்பனை கணசமான அளவு வீழ்ச்சியடைந்தது.
இலங்கையில் உற்பத்தியான நிருவின் பொருள்
(படத்தின் மேல் click செய்து பெரிதாகப் பார்க்கமுடியும்)
இருப்பினும் இதன் மூலம் வீழ்ச்சியடையும் சிறீலங்காவின் வருமானத்தை தூக்கி நிறுத்துவதற்கு தமிழர் நிறுவனமான 'நிரு பிராண்ட்' சிறீலங்காவிற்கு உதவ முன்வந்துள்ளது. கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந் நிறுவனமானது சிறீலங்கா உற்பத்திகளை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தனது உற்பத்தி என்ற பெயரில் சந்தைப்படுத்துகின்றது.
'யாழ்ப்பாண முறையில் தயாரித்த மிளகாய்த்தூள்' என்று மிளகாய்த்தூள் வியாபாரத்துடன் ஆரம்பித்து பின்பு அரிசிமா, பயற்றம்மா, உழுத்தம்மா என்று விற்பனையைப் பிடித்த இந் நிறுவனமானது தற்போது ஏனைபொருட்கள் விற்பனையிலும் கால்பதித்துள்ளது.
சிறீலங்காவின் மலிபன் நிறுவனத்தின் 'லெபன்பஃப் பிஸ்கேட்' இற்கு அந் நிறுவனத்தின் ஊடாகத் தனது பெயரில் பொதி செய்து ஆரம்பித்து சிறீலங்கா அரச நிறுவனங்களில் ஒன்றான MD இனால் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மற்றும் ஜாம் என்பவற்றிலும் அந் நிறுவனம் ஊடாகத் தனது பெயரில் பெற்று சந்தைப்படுத்தலைச் செய்து வருகின்றது.
தமிழர்களை அழித்து நிற்கும் சிங்கள கொடுங்கோல் அரசினை உலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்துவதற்கும், தமிழர்கள் நலன் பேணுவதற்காக சிறீலுங்கா அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் தமிழர்கள் போராடிவரும் இவ்வேளையில் தமிழர்களின் பணத்தில் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் ’நிரு பிராண்ட்’ நிறுவனமானது அத் தமிழர்களிற்கு எதிரான சிங்கள் அரசுடன் கைகோர்த்துள்ளதைத் தமிழர்கள் இங்கே கவனிக்க வேண்டும்.
கனடா மட்டுமல்லாது குறிப்பிட்டத்தக்க அளவு ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்களிடமும் சந்தையைத் தக்கவைத்திருக்கும் இத் தமிழர் நிறுவனத்தின் இப் பாதகச் செயலை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.
அத்துடன் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாதிருக்க அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபடவேண்டும். அவ்வாறு கவனிக்காது விடுவோமானால் அது பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாய் மாறிவிடும். உலகும் எம்மைக் கவனியாது கைகழுவும் நிலை வரும்.
0 comments:
Post a Comment