சிறீலங்காவின் பொருளாதாரமும் தமிழரும்
கற்க கசடற - An Education Expo, பதிவுகள் ஆரம்பம்!
ஏற்கனவே எனது பதில் கூறியிருந்ததைப் போன்று கனடியத் தமிழ் சமூகத்தின் தேவைகளை முன்வைத்து முதன்முறையாக நடைபெறும் Education Expo பற்றிய மேலதிக விபரங்களுடன் இப்பதிவு:
ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் அறிவூட்டும் நிகழ்வு பற்றி உங்களிற்கு ஏற்கனவே அறியத்தந்திருந்தேன்.
ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வு நடைபெறுகின்றது. காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ள இந் நிகழ்விலே பல பயன்தரும் கல்விசார் விடயங்கள் இடம்பெறவுள்ளன.
இதில் பாலர் பாடசாலையில் இருந்து தரம் 12 வரையுள்ள பாடத்திட்ட விபரங்கள், இவ் வகுப்புகளில் கல்விபயிலும் மாணவர்கள் தொடர்பாகவும் அவர்கள் கல்வித்திட்டம் தொடர்பாகவும் பெற்றோர்கள் அறியவேண்டிய விடயங்கள் தொடர்பான விளக்கங்களும் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.
அதுமாத்திரமல்லாது, high school என அழைக்கப்படும் இரண்டாம் நிலைப் பாடசாலையில் எவ்வாறு நேரங்களை ஒழுங்குசெய்வது, எவ்வாறு சோதனைக்கு தயாராவது எப்படிப் பல்கலைக்கழகத்திற்கான பொருளாதார நிலையைக் கவனிப்பது, எவ்வாறான பாடங்களை எப்படித் தெரிவுசெய்வது போன்ற பயனுள்ள தகவல்கள் மாணவர்கள் பெறக்கூடியதாக இருக்கும்.
அதேபோல் கனடாவிற்குப் புதிதாகக் குடியேறியோர் எவ்வாறு இக் கல்வித் திட்டத்தினுள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும் என்பது தொடர்பான தகவல்களும் இங்கே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அவ்வாறே வேலைதேடுவது தொடர்பான பயிற்சிகள், தகவல்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு நடாத்தப்படுகின்ற பயிற்சிப் பட்டறைகள் (workshops) இனில் பங்கு பற்றுவதற்கு முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளவேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். இப் பதிவுகள் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி, வெள்ளிக்கிழமை, வரை இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பதிவுகளை இணையத்தளமூடாகவும் (http://www.kalvicanada.org/) , நேரடியாக கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்தில் வாரநாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மேற்கொள்ளமுடியும். கனடியத் தமிழர் பேரவையானது 31 Progress Avenue (Kennedy/Progress), Suite 216 இனில் அமைந்துள்ளது.
பயிற்சிப்பட்டறைத் (workshops) தலைப்புக்கள் - http://kalvicanada.org/program.html
பதிவுகளிற்கு - http://kalvicanada.org/registration.html
இதுபற்றிய மேலதிக விபரங்களை 905-471-8070 என்ற தொலைபேசியில் அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி info@kalvicanada.com
'கற்க கசடற' - Education Expo
கற்க கசடற என்னும் ஓர் கல்விக் கண்காட்சி ஒன்று கனடித் தமிழர்களால் கனடியத் தமிழர் வரலாற்றில் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதி நாள்களில் இது நடைபெறும் எனத் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
இதுபற்றி மேலதிக விபரம் கிடைத்தவுடன் விபரமாகப் பதிவிடப்படும்.
http://www.kalvicanada.com/
புலம்பெயர் நாடுகளும் தமிழர் ஊடகங்களும்.
பிரித்தானிய ஆதிக்கம் நிலவிய காலணித்துவ காலத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தீவுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வேலைவாய்ப்புக்களிற்காக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிறிது காலம் வேலைசெய்த பின்னர் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தனர்.
அவ்வாறு திரும்பி வராதவர்கள் தாங்கள் சென்ற நாட்டின் வாழ்வுமுறைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர். இவ்வாறு தங்களை அந்தந்த நாடுகளின் வாழ்க்கைமுறைகளில் இணைத்துக்கொண்டவர்கள் மொரிசிஸ், பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் வசித்து வருகின்றார்கள்.
இலங்கைத் தீவில் வீச்சுக் கொண்ட இனப்பிரச்சினையின் பின்னர் உலக நாடுகளில் தமிழர்களின் பரம்பலானது ஓர் பெரும் வீச்சினை அடைந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் மிகப் பெரும்பகுதியினர் தாங்கள் சென்ற நாடுகளிலே தங்கள் வாழ்வைத் தொடங்கிவிட்டார்கள்.
அத்துடன் தாங்கள் வாழும் நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையுடன் வாழ்ந்து வருவதுடன் தங்கள் சமுக கட்டமைப்பையும் பேணக்கூடியவர்களாகவும் தங்கள் தமிழ் மொழி அறிவினைத் தொடர்ந்து பேணி தங்கள் குழந்தைகளிற்கும் வழங்குபவர்களாக இருக்கிறார்கள்.
அவ்வாறே பல்வேறு ஊடக முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாய் மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. குறிப்பாக வேற்றுமொழியில் சரளமாக தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாதவர்களிற்கு இம் முயற்சி மிகச் சிறந்த பயனைக் கொடுக்கும்.
ஆயினும் இவ்வூடகங்களோ இவ்வாறான மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. பணத்தைப் பெறும் ஒரு வழியாகவே இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழர்கள் ஊடகங்களை நடாத்துகின்றனர்.
குறிப்பாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களைப் பார்த்தோமேயானால் அவற்றில் தங்கள் தாய்நாட்டுத் தகவல்களையே தொடர்ச்சியாக கூறுகின்றார்கள்.
புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிற்காக அந்தந்த நாடுகளில் நடாத்தப்படும் இவ்வூடகங்கள் அந் நாடுகளில் நடைபெறும் சமுதாய மாற்றங்களை அல்லது அங்கு வாழும் தமிழர்களில் செல்வாக்குச் செலுத்தும் அல்லது பாதிக்கும் விடயங்களில் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை.
தாய்நாட்டுத் தகவல்கள் முக்கியமல்ல என்று இங்கு கூறவில்லை, தாய்நாட்டுடன் தாங்கள் வாழும் நாடு பற்றிய விழிப்புணர்வும் தேவைப்படுகின்றது என்பதனை இவ்வூடகங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தென்னிந்தியச் சினிமாப்பாடல்களும், இலங்கை இந்தியச் செய்திகளும், தென்னிந்தியச் சின்னத்திரைத் தொடர்களுமே இவ்வூடகங்களில் வெளிவருகின்றது.
அந்தந்த நாட்டு நிலவரங்களை வெளிக்கொணர வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் கடமை என்பதை அவ்வூடகங்கள் மறந்துவிடக்கூடாது. அவ்வாறு செய்யாது விடின் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் இரண்டு தமிழர் குழுக்கள் உருவாகவும் சமூகம் பற்றிய விழிப்புணர்வு அற்ற ஓர் தமிழ்ச் சமூகமாகவும் நாம் உருமாறும் நிலை ஏற்படும்
Archives
Labels
- English (7)
- அரசியற் தலைமை (1)
- இளையோர் (1)
- ஊடகம் (1)
- தமிழர் (9)
- நினைவு (1)
- புலம்பெயர்ந்தவர் (4)
- பொருளாதாரம் (1)

