கடந்த சில வாரங்களாக இளையோர் குழுவிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் அவனிடம் ஏதோ வெளியே சொல்ல முடியாத விடயம் மனதினைக் குடைந்து கொண்டிருந்தது. இருபது வயதின் ஆரம்ப நிலையில் இருக்கும் அவனது நடவடிக்கையைப் சில மாதங்களாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் எம்மினால் அதனை இலகுவாகக் கண்டறியக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் யாரிடமும் எதுவும் பேசாது எவருடனும் பழகாது தனித்தே இருப்பான். நாட்டிற்கு மிக அண்மையில் வந்திருந்ததனால் இம் மாற்றம் இருக்கலாம் என எண்ணியிருந்தோம். ஆயினும் இவனது நிலை தொடர்ச்சியாக இவ்வாறு இருப்பதைக் கண்டு அதன் காரணம் அறிய முற்பட்ட எமக்கு அவனது பெற்றோரிடம் இருந்து கிடைத்த தகவல் மேலும் சந்தேகத்தை அதிகரித்தது.
பொதுவாக யாரிடமும் நம்பிக்கைத் தன்மை அற்றவனாக அவன் இருப்பது அவனது பெற்றோரிடம் இருந்து அறியக்கிடைத்தது. இப்படியே அன்றும் ஒருநாள் தனித்திருந்தவனிடம் அவனது நிலை என்ன என்பதை அறியும் பொருட்டு உரையாடலை ஆரம்பித்தேன். கடந்த சில மாதங்களாக எம்முடன் பழகிய விதம், தொழிலிடம், மற்றும் சேவைகள் தொடர்பில் கொண்ட நம்பிக்கையின் ஊடாகத் தன் மனதில் தேங்கிக் கிடந்தவற்றை வெளியே சொல்லி ஆறுதல் தேடிக்கொள்ளும் ஏக்கத்துடன் உரையாடத் தொடங்கினான்.
அவனது உரையாடல் மூலம் எம் சமூகத்தில் வெளித் தெரியவிடாது உற்றார், உறிவினர்கள் என்னும் பாசப் பிணைப்புக்களால் மறைக்கப்படும் விடயங்களில் ஒரு விடயமும் வெளித் தெரியவந்தது. சிறுவர் பாலியல் கொடுமை, சிறுமிகள் அல்ல சிறுவர்கள்.
உரையாடலில் அவனால் கூறப்பட்ட தகவல்:
“சின்ன வயதில இருந்து எனக்கு யாரையும் கண்டா பிடிக்குதில்ல. எல்லாரும் என்னைத் தங்கட சுயநலத்திற்குப் பயன்படுத்திருவாங்கள் எண்டு எனக்குப் பயமா இருக்கு. எனக்குத் தனிய இருக்கணும் போல இருக்கு. ஆக்களோட சேர்ந்து சந்தோசமா இருக்கோணும் எண்டு நினைச்சாலும் என்னால கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சந்தோசமா இருக்க முடியுதில்ல. அதிலும் குறிப்பாக பெண்களைக் கண்டா என்னால அவங்கள ஒரு மனுசராவே பாக்க முடியுதில்ல. அவங்கள ஒரு பாலியற் பொருளாகத் தான் பாக்க முடியுது. அவங்கட முகத்த நிமிந்து பாக்க முடியல.” இவ்வளவும் கூறியவன் எனது முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை!
இதன் பின்னால் இருக்கும் விடயம் என்ன, ஏன் இவனால் சாதாரணமானவனாக இருக்க முடியவில்லை.
குடும்பத்தில் மூத்த பிள்ளை. வேலைக்குச் செல்லும் அம்மா மற்றும் அப்பா. இரண்டு சகோதரிகள். தாய் தந்தையர் வேலை சென்று திரும்பும் வரை தாயாரின் சகோதரிகள் இவனிற்கும் இவனது சகோதரிக்கும் பாதுகாவலர்கள்.
ஐந்து வயது வரை இவனைப் பார்த்து வந்தவர்களில் ஒரு சிறிய தாயாரினால் ஆறு வயது அல்லது இவனிற்கு முதன் முதலாய் நினைவில் இருக்கும் காலத்தில் இவன் மீதான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. சிறு வயது என்ன நடைபெறுகின்றது என்றே தெரியாத நிலை. இது இவனது பதினொரு வயது வரை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வேளையில் இவனது இன்னொரு உறவுக்காரரினாலும் இவன் மீதான பாலியல் கொடூரம் தொடர்கின்றது.
சிறு வயதில் நடைபெற்ற இவ்விடயம் எவ்வாறு இவனிடம் இன்றும் தாக்கம் செலுத்துகின்றது, அதனையும் அவனே விளக்குகின்றான்.
சிறுவயதில் என்னவென்றே தெரியாது பழக்கப்படுத்தப்பட்ட ஒருவிடயம் இடையில் பறிக்கப்பட்ட உணர்வு. அதன் பின்னர் அவனிற்குத் தேவையேற்பட்ட பொழுதில் கிடைக்காத தொடர்பு. இவை அவனை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. இதன் காரணமாகத் தனது படிப்பினைக் குழப்புகின்றான். பின்னர் நீண்ட ஒரு போராட்டத்தின் பின்னர் தன் முயற்சியினால் சாதாரண நிலைக்கு வரும் போது புதியதோர் நாட்டிற்கான இடப்பெயர்வு. இவ்வாறு தொடர்ச்சியாக அவனிடம் வந்து சேர்ந்த இடர்கள்.
சிறுவயதில் தன்னை அறியாது தன்மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை காரணமாக அதனை அறிந்து கொள்ளும் பருவத்தில் அறியந்த பின்னர் அதனை மேற்கொண்ட தன் சிறிய தாயிடம் ஏற்பட்ட வெறுப்பு பெண்களை முழுமையாக வெறுப்பதற்கு அடித்தளமிட்டுள்ளது.
அது மட்டுமல்லாது அவன் கூறிய இன்னொரு விடயம் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கது. தன்னால் பெண்களை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை. அவர்களைக் காணும் போதெல்லாம் தன்னில் கொலைவெறி எழுகின்றது. தன்னைத் தன் சிறிய தாய் தனது உணர்ச்சிக்குப் பாவித்ததைப் போல் அவர்கள் அனைவரையும் நான் பாவிக்கவேண்டும் என்ற உணர்வு தோன்றுகின்றது.
உறவினர்கள் மீது வைத்த நம்பிக்கை, அந் நம்பிக்கையின் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தினைத் தவறாகப் பயன்படுத்தியமை என்பன ஒருவனை ஒரு கொடூரமானவனாக வளர்த்தெடுத்திருக்கின்றது. இதன் முக்கிய பங்கினை அவனது பெற்றோர்களும் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டியவர்கள் ஆகிறார்கள்.
ஏனையோரிடம் நம்பிக்கை வைப்பதை விடுத்து தங்கள் குழந்தைகளில் தாங்கள் இல்லாத நேரங்களில் என்ன என்ன மாற்றம் நிகழ்கின்றது என்பதனை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவர்களாகப் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
மேற்கத்தேய நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் செய்திகளில் வரும் போது நாம் அதைக் கவனிக்காது அவர்களது கலாச்சாரம் அப்படிச் செய்ய வைக்கிறது என விட்டுவிடுகின்றோம், ஆனால் எமது மக்களிடம் இவை போன்ற விடயங்கள் மூடி வைக்கப்படுகின்றன. இது பிள்ளைகளின் எதிர்காலத்தை மிக மோசமாப் பாதிக்கும் விடயம்.
வளர்ச்சியடையந்து வரும் நாடுகளில் இவை தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக இல்லாத காரணத்தாலும் சட்டமுறையை விடச் சமூக கலாச்சார கட்டுப்பாடுகளின் கட்டுக்களாலும் இவை வெளித்தெரியாது உள்ளேயே உறைந்து சிறார்களின் வாழ்வினை சீரழித்து விடுகின்றது.
சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களும் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறுமிகளின் மீதான வன்முறை சிறிதளவாவது வெளித்தெரியும் வேளையில் சிறுவர்களின் மீதான வன்முறையானது எமது சமூகத்தில் பாரிள அளவினிலே மறைக்கப்படுகின்றது. இது வன்முறை உணர்வுகள் கொண்ட ஒருவனாக ஒருவனை வளர வழிசமைக்கிறது.
யாராயிருப்பினும் குழந்தைகளின் எதிர்காலம் என்பது பெற்றோர்களின் கையிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது; குழந்தைகளில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகக் கண்டறிந்து கொண்டு அது தொடர்பாக சிரத்தை எடுத்தால் இவ்வாறான சிக்கல்களில் இருந்து பெற்றோர்களால் குழந்தைகளை மீட்க முடியும்.
இதனுடன் தொடர்புபட்ட தகவல்:
கடந்த நவம்பர் மாதம் பிரித்தானிய ஊடகம் ஒன்றில் வெளிவந்த தகவல்
தகவலிற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்
I was abused by a woman and it haunts me every day
0 comments:
Post a Comment