ஆகஸ்ட் 13

Thursday, August 13, 2009 ·

13ம் இலக்கம் என்றாலே மேற்குநாட்டினரிற்கு கொஞ்சம் கசப்பான இலக்கம். அதுவும் அவர்கள் கிருத்தவர்கள் என்றால் 13ம் இலக்கத்தில் எந்த நிகழ்வுகள் செய்வதனையும் தவிர்த்து வருவார்கள். ஏன் பெரும்பாலான இடங்களில் அடுக்கு மாடிக் கட்டடங்களில் 13 ஆவது தளத்தினைத் தவிர்த்து 12 இற்குப் பிறகு 14 ஆவது தளம் என்று சுட்டிக்காட்டுவார்கள். இவ்வாறு மேற்கு நாட்டினரிடையே இருந்த இப் பழக்கம் கிழக்கு நாட்டினரிற்கும் தென்னாசிய நாடுகளிற்கும் மேல்நாட்டு ஊடகங்களின் வாயிலாக உட்புகுத்தப்பட்டுள்ளது.

சரி இதனை ஏன் இன்று அதுவும் ஆகஸ்ட் 13 என்று தலைப்பிட்டுவிட்டு இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி உங்கள் அனைவர் மனங்களிலும் எழுவது தவிர்க்கமுடியாதது.
ஆம் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்ட இவ்விலக்கம் நெடுங்காலமாக விசித்திரமான மனிதர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர்கள் விசித்திரமானவர்கள் அல்ல என்று சமூகத்தில் ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, பன்னாட்டு இடதுகைப்பழக்கம் உள்ளவர்களிற்கான நாளாக பன்னாட்டு இடதுகைப்பழக்கம் உள்ளவர்களின் அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டிலிருந்து இது கடைப்பிடிக்கப்படுகின்றது.
20 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் இடதுகைப்பழக்கம் உள்ளவர்களிற்கு சாத்தானின் தொடர்பு உண்டு என்று கூறி அவர்களை இச் சமூகம் ஒதுக்கிவைத்திருந்தது. ஆயினும் இன்று உலகநாடுகளைக் கட்டுப்படுத்தும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் அதிபராகப் பதவியேற்று உலகநாடுகளைக் கட்டுப்படுத்தும் பராக் ஒபாமா இடதுகைப் பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடதுகைப் பழக்கம் என்பது வலது கைக்குப் பதிலாக இடது கையைப் பாவிப்பது தானே என்பது போன்று சிறியதொரு மாற்றமாகத் தோன்றினாலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது மிகவும் உண்மையான விடயம்.
இதற்கு சிறிய ஓர் உதரணமாக நாம் பயன்படுத்தும் கணினியின் மெளஸ் (Mouse) இனை எடுத்துக்கொள்ளலாம். அதில் நாம் அதிகம் பயன்படுத்துவது left button. சுட்டுவிரலினால் இலகுவான பயன்படுத்துவதற்காக அவ்வாறு செய்துள்ளார்கள். ஆனால் இதனை இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சுட்டுவிரல் தவிர்ந்த விரலினைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனைச் சரிசெய்யும் ஓர் உத்தியாகவே இடதுகைப் பழக்கம் உள்ளவர்களான அப்பிள் கணினியை வடிவமைத்தவர்கள் அதன் mouse இற்கு ஒரேயொரு button இனை வைத்து வடிவமைத்துள்ளார்கள்.
இடதுகைப் பழக்கம் என்பது ஒரு நோயல்ல, அல்லது அவர்களை ஒதுக்கி வைப்பதற்கு அவர்கள் சாத்தானிடம் இருந்து வந்தவர்களும் அல்ல. அது மரபணுவுடன் சம்மந்தப்பட்ட விடயம். அத்துடன் அவர்களைச் சிறுவயதில் சுற்றியுள்ளவர்களால் ஏற்படும் மாற்றம். ஆதலால் இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை அவர்களின் செயற்பாடுகளில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முனையாது அவர்களை அவர்களது செயலில் ஈடுபட நாம் அனுமதிக்க வேண்டும்.
நாம் இடது கைப்பழக்கம் உள்ள குழந்தை என்று ஓர் குழந்தையை வலது கைப் பழக்கம் உள்ள குழந்தையாக மாற்ற முனைவோமாயின் அக் குழந்தையின் மனநிலை குழப்பமடையலாம். அது அக் குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைக்குக் கூட இட்டுச்செல்லலாம்.

0 comments:

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator