கடந்த மே மாதம் முதல் இடியப்பச் சிக்கலாக உருமாறிய தமிழீழப் பிரச்சினை ஓர் முடிவிற்கு வருவது போன்ற நிலை இதுவரை என் கண்களில் எட்டவில்லை. மாறாக மென்மேலும் இது சிக்கிலான வடிவம் எடுப்பது போன்ற தோற்றப்பாடே என்முன் தோன்றி நிற்கின்றது. பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து 1948ஆம் ஆண்டில் சிங்கள அசாங்களின் கைகளிற்கு இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரம் கைமாறி, தமிழர்களின் சுதந்திரம் அடியோடு மறுக்கப்பட்ட நிலையில் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இவ்வருட ஆரம்பம் வரை தமிழர்கள் தங்கள் உரிமை மீண்டும் பெறப்படப் போகின்றது என்ற நிலை இருந்தது. ஆயினும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பது போன்று தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலு உலக நாடுகளால் நசுக்கப்பட்ட வேளையில் மீண்டும் ஆரம்பித்த இடத்தை விட்டு தமிழர்களின் உரிமைப் போராட்டம் பின்தங்கியுள்ளதாகவே நான் உணருகின்றேன். ஆயுதப் போராட்டக் கருத்து வலுப்பெற்று இளையவர்கள் ஆயுதம் ஏந்திய 70இற்கு முற்பட்ட காலப்பகுதியை நான் ஊடகங்கள் மூலமும் பொத்தகங்கள் மூலமாகவும் பெற்றுக்கொண்ட அறிவினூடா திரும்பிப் பார்க்கின்றேன். பல்வேறு அரசியற் தலைவர்கள்@ தங்களிடம் தங்கள் இனத்தின் தேவைகள் தொடர்பாக ஓர் ஒத்த கருத்தினைக் கொள்ளமுடியாதவர்கள். சிங்கள அரசுகளுடன் தங்களை சமரசம் செய்துகொண்டு தமிழர் உரிமைகளை அடகுவைத்தவர்கள் எனப் பலர். இவர்களின் தமக்குள்ளான சண்டைகளைப் பொறுக்கமுடியாத இளையோர்கள் தாங்கள் அணி திரண்டனர். அவ் இளையோரிற்கும் இம் மூத்த தலைவர்களால் இடையூறுகள். இவற்றிற்கிடையே ஆயுதம் மீது இவ்விளையோர் நம்பிக்கை வைக்கின்றார்கள். பொன். சிவகுமாரன், சிங்களப் படைகளை தன்னந் தனியனான களைப்படையச் செய்கின்றான். தன்கூட தனக்கு கைகுடுக்கும் சிலவேளைகளில் நடுவழியில் விட்டுவிடும் நண்பர்கள் துணையுடன் ஆயுதம் மீது நம்பிக்கை வைக்கின்றான். அவன் வழியில் பிடிப்புக் கொண்டு பின்னாட்களில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. தன் கொள்கையில் உறுதி கொண்ட பொன். சிவகுமாரன் சிங்கள அரசபடைகளின் சுற்றிவளைப்பில் அகப்படும் போது நஞ்சுண்டு தற்கொலை செய்து தன் உறுதியை வெளிப்படுத்தினான். உருப்பெற்ற ஆயுதக் குழுக்கள் தமிழீழ விடுதலையைத் தங்கள் கொள்கையாக வரித்துக் கொண்டு ஆயுத இயக்கங்களாக உருமாற்றம் அடைகின்றன. பின்னர் தலைவர்கள் வழி தவறிய போக்கினைத் தொடர்ந்து ஏனைய இயக்கங்கள் வலுவிழக்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மாபெரும் விடுதலை இயக்கமாக கொள்கைப் பிடிப்புள்ள போராளிகள், தளபதிகள் மற்றும் தலைவர்களுடன் உருமாறியது வரலாறு. இப்படி ஒரு வரலாற்று நிகழ்வினை எம் கண்முன்னே கண்டுவந்த தமிழர் மீண்டும் 70களின் ஆரம்பத்தில் எவ்வாறு மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட எம் தமிழ் தலைவர்கள் பதவிக்காகவும் சொகுசுக்காகவும் அடிபட்டுக்கொண்டார்களோ அவ்வாறே அடிபட்டுக்கொண்டுள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரதேசத்தில் நிலங்களைக் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்களே தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தெளிவாக அடையாளப்படுத்தியும் தலைமையேற்றும் முன்னெடுத்து வந்திருந்தனர். இன்று அவர்களது இராணுவபலம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் இருந்து கொண்டு சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைகளிற்கு எதிராக எதும் செய்ய முடியாத நிலையில் மக்கள் இருக்கும் வேளையில் அவ்வாறான அரசியற் செயற்பாட்டை உலகளாவிய ரீதியில் மிக வேகமாக முன்னெடுத்து தமிழர்களின் பிரச்சினை தீர வழியேற்படுத்த வேண்டிய புலம்பெயர் சமூகமானது தமிழர் பிரச்சினையை மிகவும் சிக்கல்படுத்தி மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு நகர்த்திச் சென்றுகொண்டுள்ளது. இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் இருக்கும் தமிழர் அரசியலில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் அனைவரும் தங்கள் நலன்களை முன்னிறுத்துவது போன்றே எனக்குத் தோன்றுகின்றது. இதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளிற்கு உதவியாக இருந்தவர்கள் முன்னிற்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. அவர்கள் தமக்குள் அணிபிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குழப்பும் மற்றும் வசைபாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இதுவரைகாலமும் தமிழீழ மக்களின் துன்பம் களையத் தாங்கள் பாடுபடுவதாக் கூறியவர்கள் இன்று மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் துன்பச் சுமையைச் சுமக்க மேலும் வலுவற்றவர்களாக இருக்கும் வேளையில் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டியவர்கள் அற்பத்தனமாக நடந்து கொள்கின்றார்கள். இவர்களின் இவ்வாறான செயற்பாடானது இவர்கள் எதற்காக இவ்வளவு காலமும் ஒட்;டியிருந்தார்கள் என்ற கேள்வியை என்னுள் எழுப்புகின்றது. இவ்வாறான இப் பெரியவர்களின் செயற்பாடானது ஓர் முற்றிற்கு வரவேண்டியுள்ளது. இன்று ஈழத்தமிழனம் தனக்காக தமிழர் நலனையே நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த தலைவர்களை இழந்த நிலையில், மீண்டும் ஓர் தலைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இவ்வாறான தலைமைப் பெற்றுக்கொள்வதற்கு ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களாவது கடந்து முடியும் என்பது என் கணிப்பு. இதற்குள் தமிழின அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையும் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு எமக்குள்ளே நாம் குடுமிப்பிடிச் சண்டை செய்துகொண்டிருக்கும் சூழலில் எவ்வாறு இத் தலைமையை அடைவது, இத் தலைமைப் பொறுப்பினை யாரால் வகிக்கமுடியும் எனக் கேள்விகள் எழும் போது அதற்கு விடையாக அமையப்போவது எது. ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களின் பின் ஓர் சிறந்த வலுவான தலைமை அமைந்தால் மட்டும் போதாது, அது தொடர்ச்சியாகச் செயலாற்ற வேண்டும். தனக்குப் பின்னர் தலைமையேற்பதற்கு என தொடர்ச்சியான தலைவர்களை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடைபெறவேண்டுமாயின் இதற்குத் தகுதியானது தற்போது பதினெட்டு வயதிலிருந்து முப்பது வயதிற்குட்பட்ட இளையவர்களினாலேயே முடியும். அதுவும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் உருவாக வேண்டும். இதனை நான் இங்கு குறிப்பிடும் போது அனைவரும் வாய்விட்டுச் சிரிக்கலாம் அல்லது என்னைப் பைத்தியக்காரன் எனலாம். வரலாறு எனது வழிகாட்டி என வாழ்ந்து காட்டிய தலைவனை நான் அடையாளம் காட்டுகின்றேன். பதினாறு வயதில் துப்பாக்கியுடன் புறப்பட்ட அத்தலைவன் முப்பது வயதிலே தமிழீழப் போராட்டத்தின் காவலனாக முப்பத்து மூன்று வயதிலே பொறுப்பேற்கின்றான் (ஏனைய போராட்ட அமைப்புக்கள் தமிழீழ விடுதலை அரங்கில் மக்கள் செல்வாக்கை இழந்து தடைவிதிக்கப்பட்ட காலம்). அதனாலேயே இவ்வாறு ஓர் பலங்கொண்ட அர்ப்பணிப்புக் கொண்ட விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்த முடிந்தது. இளையவர்களிடம் இருந்து அர்ப்பணிப்புள்ளவர்களை, சுயநலம் அற்றவர்களை மற்றும் கொள்கைப் பற்று உள்ளவர்களை இப்போதே அடையாளம் அவர்கள் பின்னால் அணிவகுக்கவேண்டிய கட்டாய கடமைப்பாடு உலகெங்கும் உள்ள தமிழர்களிற்கு உண்டு. முதிர்ந்த தலைவர்களாக இருக்கலாம் ஆயினும் எதிர்கால தமிழ் இனத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இளையோரிடம் தங்கள் தலைமைப் பொறுப்பினை அவர்கள் கைமாற்றவேண்டும். இன்று இக்குறிப்பிட்ட வயதெல்லையில் இருப்பவர்களால் மட்டுமே நிலையான தலைமைத்துவத்தினை நீண்டகாலத்திற்கு வழங்கி தொடர்ந்து தலைவர்களை அடையாளம் காட்ட முடியும். அத்துடன் நீண்டகாலத்திற்கு திறனுடன் செயலாற்ற முடியும் என்பது என் கணிப்பு. அத்துடன் இளையவர்களைச் சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத் தலைவர்களை அடையாளம் காணக்கூடியவாறு இருக்கும். இளையவர்களை முன்னே விட்டுவிட்டு பின்னால் நின்று அதைச் செய்யாதே இதைச் செய்யாதே அல்லது இவ்வாறு தான் இதனைச் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பதை நிறுத்தவேண்டும். தமிழினம் இன்று நிற்கும் இவ் இக்கட்டான நிலையில் இருந்து மீளவேண்டுமாயின் இளைவர்களை அவர்களது வழியில செயற்படவைத்து அவர்களிற்கு பக்கதுணையாக நிற்காவிடின் தமிழினம் மீளாது என்பதுறுதி. எவ்வாறு இளையவர்களால் எழுபதுகளின் முற்பகுதியில் துணிவுடன் அப்போதைய முதிர்ந்த தலைவர்களை எதிர்த்து அனைவரையும் எதிர்த்து சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதைப் போன்றதொரு போராட்டம் அடக்க நினைப்பவர்கள் அனைவரையும் எதிர்த்து முன்னெடுக்கப்படவேண்டும். ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் எதற்காக உயிர்விட்டார்கள். தமிழீழம், தமிழினம் என்றதற்காக மட்டுமே உயிர்விட்டார்கள். தாயிருந்தும் தந்தையிருந்தும் கூடப்பிறந்து வாழ்ந்த சோதரர்கள் தானிருந்தும் அக்கம் பக்கம் அயலிருந்தும் கூடிக் குலாவிய சொந்தமிருந்தும் எதற்காக வெடிசுமந்தார் காரிருள் வேளையிலும் ஆழக் கடல் பரப்பினிலும் கடும்மழைக் குளிரிலிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தேகமெல்லாம் வலிக்கையிலும் எதற்காக வெடிசுமந்தார் வெடியாகிப் போகையிலே – கண்ணெதிரே அம்மா வந்தாலென்ன அப்பா வந்தாலென்ன ஒற்றுமையாய் ஒன்றாக பள்ளிசென்ற தம்பி வந்தாலென்ன தங்கை வந்தாலென்ன நட்பு வந்தாலென்ன மெல்லியதாய் புன்னகைத்து கையசைத்து வார்தையேதும் சொல்லாது சென்றிட்ட கரும்புலிகள் தியாகங்கள் தியாக வேள்விகளில் குளிர்காய்ந்தநாம் இனியேனும் சிறுதுரும்பாவது அசைக்க முயல்வோம். இளையோரின் பின்னாலே அணிவகுத்துத் தயாராவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Archives
Labels
- English (7)
- அரசியற் தலைமை (1)
- இளையோர் (1)
- ஊடகம் (1)
- தமிழர் (9)
- நினைவு (1)
- புலம்பெயர்ந்தவர் (4)
- பொருளாதாரம் (1)
1 comments:
I agree on what you have said.
The way you write to deliver a message is really good! Keep writing!
Post a Comment