புலம்பெயர் நாடுகளும் தமிழர் ஊடகங்களும்.

Tuesday, September 15, 2009 ·

பிரித்தானிய ஆதிக்கம் நிலவிய காலணித்துவ காலத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தீவுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வேலைவாய்ப்புக்களிற்காக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிறிது காலம் வேலைசெய்த பின்னர் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தனர். அவ்வாறு திரும்பி வராதவர்கள் தாங்கள் சென்ற நாட்டின் வாழ்வுமுறைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர். இவ்வாறு தங்களை அந்தந்த நாடுகளின் வாழ்க்கைமுறைகளில் இணைத்துக்கொண்டவர்கள் மொரிசிஸ், பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் வசித்து வருகின்றார்கள். இலங்கைத் தீவில் வீச்சுக் கொண்ட இனப்பிரச்சினையின் பின்னர் உலக நாடுகளில் தமிழர்களின் பரம்பலானது ஓர் பெரும் வீச்சினை அடைந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் மிகப் பெரும்பகுதியினர் தாங்கள் சென்ற நாடுகளிலே தங்கள் வாழ்வைத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் தாங்கள் வாழும் நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையுடன் வாழ்ந்து வருவதுடன் தங்கள் சமுக கட்டமைப்பையும் பேணக்கூடியவர்களாகவும் தங்கள் தமிழ் மொழி அறிவினைத் தொடர்ந்து பேணி தங்கள் குழந்தைகளிற்கும் வழங்குபவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறே பல்வேறு ஊடக முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாய் மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. குறிப்பாக வேற்றுமொழியில் சரளமாக தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாதவர்களிற்கு இம் முயற்சி மிகச் சிறந்த பயனைக் கொடுக்கும். ஆயினும் இவ்வூடகங்களோ இவ்வாறான மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. பணத்தைப் பெறும் ஒரு வழியாகவே இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழர்கள் ஊடகங்களை நடாத்துகின்றனர். குறிப்பாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களைப் பார்த்தோமேயானால் அவற்றில் தங்கள் தாய்நாட்டுத் தகவல்களையே தொடர்ச்சியாக கூறுகின்றார்கள். புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிற்காக அந்தந்த நாடுகளில் நடாத்தப்படும் இவ்வூடகங்கள் அந் நாடுகளில் நடைபெறும் சமுதாய மாற்றங்களை அல்லது அங்கு வாழும் தமிழர்களில் செல்வாக்குச் செலுத்தும் அல்லது பாதிக்கும் விடயங்களில் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை. தாய்நாட்டுத் தகவல்கள் முக்கியமல்ல என்று இங்கு கூறவில்லை, தாய்நாட்டுடன் தாங்கள் வாழும் நாடு பற்றிய விழிப்புணர்வும் தேவைப்படுகின்றது என்பதனை இவ்வூடகங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தென்னிந்தியச் சினிமாப்பாடல்களும், இலங்கை இந்தியச் செய்திகளும், தென்னிந்தியச் சின்னத்திரைத் தொடர்களுமே இவ்வூடகங்களில் வெளிவருகின்றது. அந்தந்த நாட்டு நிலவரங்களை வெளிக்கொணர வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் கடமை என்பதை அவ்வூடகங்கள் மறந்துவிடக்கூடாது. அவ்வாறு செய்யாது விடின் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் இரண்டு தமிழர் குழுக்கள் உருவாகவும் சமூகம் பற்றிய விழிப்புணர்வு அற்ற ஓர் தமிழ்ச் சமூகமாகவும் நாம் உருமாறும் நிலை ஏற்படும்

0 comments:

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator