உலகக் காதலர் தினம்

Tuesday, February 15, 2011 ·

பிறக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும்
பெப்ரவரி 14ம் திகதி
பூமிப்பந்தின் நாடுகளெல்லாம்
பூப்பெய்திய திருக்கோலம்



உலகக் காதலர் தினம்

வான வேடிக்கைகளின் பவனி
வாழ்த்து மடல்களின் பரிமாற்றம்
இதழ்களின் முத்த முத்திரியை
விருப்பமுடன் இடம்மாற்றும்
லீலைகளில் காதலர்கள்

காதல்தான் உலகம்
காதல்தான் வாழ்க்கை
காதல்தான் உயிர்
காதல்தான் மனிதன் என
ஊடகங்களின் மொத்தமான
உரத்த பறையடிப்பு

சர்வம் காதல் மயம் - என்னும்
கோசத்தை ஏந்தி
சங்கீதமாய் உலாவரும்
அன்றைய காற்று

இளமைதான் தேசங்களின்
இயங்கு நிலைச் சக்தி - இருந்தாலும்
அவர்களுக்கும் காதல்தானாம் முத்தி

சூரியனின் காதல்தான் தாமரை
பனித்துளியின் காதல்தான் புல்நுனி
நேரிய நல்வாழ்க்கைப் பாதைக்கே
நிழல்தரும் மேகங்கள் காதல்தானாம்

காதல் ஒரு கடவுள்
தொடுகை இல்லை
தெரிவதில்லை
நுகர்வதில்லை
அறிதலில்லை
உணர்தல் மட்டுமே முடியும்

அன்றுதான் சந்தோச ரேகைகள்
உலகெங்கும் பரவும் நாள்
மத்தாப்பாய் இன்பங்கள்
மனசெங்கும் நிரவும் நாள்
காற்று மண்டலக் கூடுகளிலெல்லாம்
கனவுப் பறவைகள் குடிபுகும் நாள்

இதுபோலத்தான் அன்றும்
ஆண்டு 2001
பெப்ரவரி 14
உலகத்து நாடுகளிலெல்லாம்
அன்றும் தான் காதலர்தினம்
உள்ள+ரில்
தமிழர்களிற்கு மட்டும்
ஓய்வான காலமது

பூமித்தாயின் நெற்றிப் பொட்டாய்
உருவாகத் துடிக்கின்ற ஒரு நாடு
தமிழீழம்
ஆமி என்னும் சிங்களப் படைகளினால்
ஆக்கிரமித்தல் கண்ட ஒரு நாடு
தமிழீழம்

உலகெங்கும் அன்று காதலர்தினம்
உள்ள+ரில் தமிழரிற்கு ஓய்வான காலம்

உலகத்தை எங்கள் மேல்
கவனிக்கச் சொல்லி
ஒருதலைப் பட்சமாய்
போரோய்வு பேணி
அழிவுள்ளும் சலியாது
வாழ்கின்ற தமிழர்
அன்றைக்கும் அமைதியாய்
இருந்திட்ட காலம்

பளைப்பகுதியின் காவலரண்
துப்பாக்கி இருந்தும்
சுடாத எம் படையணிகள்
அழைப்பின்றி வருகின்ற
பகைவரது முன்னேற்றம்
ஆறுதலாய் கவனிக்கும்
எம்மவரின் மதிநுட்பம்

இருந்தாலும் என்ன செய்வது?

பேரினவாதிகளின் பெருஞ்சமருக்காய்
எறிகணைகள் மழையாகி
ஊரையே உலுக்கியது

எம்மவரும் பாதுகாப்பாய்
நிலையெடுக்கும் நேரத்தில்
ஒவ்வொரு வெடியதிர்வும்
உள்நுழையத் தொடங்கியது

அம்மா….

என் நண்பன் ஒருவனது
உயிர் உறையும்
ஒர் அலறல்

கரும்புகை மண்டலத்தில்
கண்ட காட்சியிலும் கரிப்படிவு
ஒரு கால் சிதைந்த நிலையில்
என் போராளித் தோழனின் திருவுருவம்
காலில் இருந்து குருதியும்
முகத்தில் இருந்து வியர்வையும் வழிந்தபோதும்
புரட்சியின் தூய்மையை
அந்த உருவம்
சிந்திக் கொண்டிருந்தது

“நாம் சண்டையை விரும்பவில்லை
உயிர்வாழ வேண்டுமானால்
சண்டையை விட வேறுவழியில்லை”
அவன் அணிந்திருந்த
வரிச்சீருடையில் மறைந்திருந்த வரிகள்
இதுதானோ

இரவு வானொலிச் செய்திகளில்
இதயங்களை மகிழ்வித்த
காதலர் தினம்
சிறப்பு நிகழ்ச்சிகளாய்

உண்மைதான்

உலகெல்லாம் அன்று
காதலர் தினம்
என் உயிர்த் தோழனுக்கோ
அது கால் இழந்த தினம்

இப்படித்தான் எங்களது வாழ்க்கைப்பாடு
இனி வருகின்ற
மனித உரிமைகள் தினத்தன்று
எங்கள் உயிர்கூடப் பறிக்கப்படலாம் - ஆனால்
ஈழத்தமிழனை ஒருபோதும்
காலச் சருகுகள் மூடாது – மாறாக
காலைச் சூரியன்
தினம் பாடும்

-கவியாக்கம்: கு.வீரா

0 comments:

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator