ஒழுக்கம்

Sunday, August 23, 2009 ·

இன்று இணையத்தளத்தில் ஓர் செய்தி படித்துவிட்டு அச் செய்தியுடன் தொடர்புடைய விடயம் தொடர்பாக எம் மனதிற்குட்பட்ட விடயத்தில் ஆராய்ச்சியில் இறங்கியிருந்தேன். அப்போது அதற்கு எவ்வகையிலும் ஒன்றிணையாத வகையில் இன்னொரு விடயத்தின் மீது எனது கவனம் சென்றுகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது.
ஒழுக்கம், உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தினாலும் கடைப்பிடிக்கப்படும் ஓர் மிகச் சாதாரண விடயம்.
இது இனத்திற்கு இனம், உயிரினத்திற்கு உயிரினம் மற்றும் குடும்பத்திற்குக் குடும்பம் வேறுபடும்.எம் மனித இனத்திலே பல்வேறு பட்ட மனிதக் குழுமங்களும் பல்வேறு வேறுபட்ட சிலவேளைகளில் ஒன்றுக்கொன்று முரணான விதிகளை வகுத்து ஒழுகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே ஒவ்வொரு நாடுகளும் அவற்றிற்கென்று குறிப்பான ஒழுக்கங்கள் நடைமுறைகளைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விடயங்களில் பொதுப்படையான முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படைகள் விடயத்தில் உயர் ஒழுக்கம் கடைப்பிடிக்கடுவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் சிறீலங்கா, இந்தியப் படைகளினால் தமிழீழப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்கமீறல்களும் என்மனக் கண்முன்னே வந்து தொலைக்கிறது.
இம்மனவோட்டமே என்னை இன்று இது தொடர்பாக அனைவருடனும் பகிர்ந்து கொள்ள உந்தித்தள்ளியது.
இவ்வாறு ஓர் ஒழுக்கங்கெட்ட படைகளிற்கு எதிரான வீரச்சமராடிய தமிழீழ மாவீரர்களின் ஒழுக்கமானது அவர்களை எல்லாரினையும் விட மேலே உயர்த்துகின்றது.
மே மாதம், இரண்டாம் மூன்றாம் கிழமைப் பகுதிகள், போரின் உச்சக்கட்டம். ஒவ்வொரு எறிகணையிலும் உயிர்கள் பறிகொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மே மாதம் 19ம் திகதிக்குப் பின்னர் சிறீலங்கா அரசு தமிழீழ மாவீரர்களின் படங்களை வெற்றிக் களிப்புடன் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. என் மனமோ துன்பச் சுமையில் நசுங்கிக் கொண்டிருந்தது. இருந்தும் பெருமை கொண்டது. அக் களத் தமிழீழ மாவீரர்களின் ஒழுக்கங்களை எண்ணி.
சிறீலங்கா அரசாங்கம் வெளியிட்ட புகைப்படங்களில் இருந்த படங்களில் இருந்து ஒவ்வொரு மாவீரனின் முகத்தையும் கவனிக்கின்றேன். ஒழுங்காக சவரம் செய்யப்பட்ட முகம். எவ்வளவு ஓர் கட்டுப்பாடான ஒழுக்கம் பேணப்பட்டிருக்கவேண்டும்! அடுத்த நொடி உயிர் இருக்குமோ இல்லையோ என்று தெரியாத நிலை. ஆயினும் தங்கள் படை ஒழுக்கத்தை எவ்வளவு இறுக்கமாகப் பேணியுள்ளார்கள்.
சாதாரண போராளிகள் மட்டுமன்றி தலைவர்கள், பொறுப்பாளர்கள் என்று அனைவரும் பேணியுள்ளார்கள்.
கடந்த முப்பத்திமூன்று ஆண்டுகளிற்கு மேலாக முனைப்புப் பெற்று, இத்தனையாயிரம் போராளிகள் கட்டுப்பாட்டுடன் கண்ணியத்துடன் கட்டிக்காத்துப் போராடிவந்த வேளையில் அவர்கள் தியாகத்தை அடகு வைத்து நாம் எவ்வாறெல்லாம் பேசுகின்றோம்.
தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்தை வரிந்து கொண்டு போராடியவர்கள் வழியில் நாமும் போராடவேண்டாமா.
யார் பெரிது என்ற பேதமின்று அனைவரும் ஒழுக்கமுடன் எம் மாவீரர் தடம் பற்றி எமக்காய் அவர்கண்ட கனவுகளை நாம்சுமந்து ஒன்றாகி நிற்போம். எதிரியின் தடை தகர்ப்போம். எம் தேசம் மீட்போம்.

0 comments:

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator