Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

நினைவை விட்டு அகலாதோர்..

Tuesday, June 14, 2011 · 0 comments

இன்று சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் மனிதஉரிமை மீறல் தொடர்பான ஒளித்தொகுப்புக் காட்சிகள் வெளியாக உள்ள இவ்வேளையில் மனதில் ஓர் இனம்புரியாத ஓர் உணர்வு. இதைக் கவலை என்பதா, ஆதங்கம் என்பதா, இயலாமை என்பதா என்னவென்றே பொருள்கொள்ள முடியாததாக அனைத்தும் கலந்ததான ஓர் உணர்வு.

ஒரு இனம் தான் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக எத்தனை துன்பங்கள், எத்தனை அவலங்கள். இவற்றையெல்லாம் மதிக்காது ஒரு சில தனிமனிதர்களின் நலனிற்காக ஒரு இனத்தையே எப்படியாக அடக்குகின்றார்கள்.

இந்தவேளையில் இம் மக்களிற்காக, இத் தமிழ் இனத்திற்காக, எமக்காக எம்மில் இருந்து போராடப் புயலாகப் புறப்பட்டு எமக்காய் தம் உயிர்களை உவந்தளித்த அந்த உத்தமர்கள் நினைவுகள் எண்ண அலைகளில் தொடர்கின்றன. தான் வாழவன்று உறவுகள் வாழவேண்டும் என்பதற்காய் தமது ஆசைகளைப் புறந்தள்ளிக் களமாடிக் கண்மூடிய கண்மணிகள் எத்தனைபேர்…

தான் வாழவேண்டும் தன் குடும்பம் வாழவேண்டும் என்று தனக்கு ஆலவட்டம் பிடிக்கும் பலபேர் மத்தியில் தான் சார்ந்த இனத்து மக்கள் முன் சுடுகலன் நீட்டப்பட்ட போதெல்லாம் தம்மைக் கொடையாக்கி அம் மக்களைக் காத்த காவிய வேங்ளைகளின் இனிய முகங்களை எப்படி மறந்தொதுக்க முடியும்… எத்தனை காலம் தான் சென்றாலும் வானும், கடலும், தரையும் உள்ளவரை அவர்கள் முகங்களும் வந்து போகும்…


ஒரு இரசிகனின் நிலை

Monday, January 31, 2011 · 0 comments

நடிகனிற்காய் வால் பிடிக்கும் இளைஞர் கூட்டம் இதனால் தங்கள் வாழ்நாளினை இழக்கிறார்கள். நடிகன் தான் பணம் உழைப்பதற்காகவும் தன் புகழை மற்றவர்கள் பாடத் தான் கேட்பதற்காகவும் மட்டுமே இந்த இரசிகர் கூட்டம் எனப்படும் கூட்டத்தை வைத்திருக்கின்றானே தவிர, அந்த நடிகனின் படம் ஓடுவதாலோ அன்றி ஓடாமல் போவதாலே எந்தவொரு இரசிகனும் பலன் பெறப் போவதில்லை.

ஆயினும் இவ் அடிப்படை உண்டை விளங்காது பலரும் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்க விளைகின்றார்கள். இதனால் இழக்கப்படுவது இவ் அப்பாவிகளின் பணம் மட்டுமல்ல, அவர்களது நிம்மதியும் கூடவே இழக்கப்படுகின்றது. ஒரு நடிகனின் படம் ஓடாவிட்டாலே அதற்கு எதிராகக் கருத்துக் கூறினாலோ ஏதோ தன்னுடைய கௌரவம் குறைந்து விட்டது போன்றே இவர்கள் செயற்படுகின்றார்கள்.

ஏற்கனவே எத்தனையோ புறக்கணிக்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்களுள் கட்டுண்டு கிடக்கும் இச் சமூகத்தில் இந் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்கும் பழக்கமும் வேரூன்றி வருகின்றது. இதற்குக் காரணம் கல்வியறிவில் பின்தங்கியுள்ள நிலைமையா அன்றி தேவையற்ற பிடிவாதக்குணமா என்பதனை நடிகர்களைக் கடவுள்களாகப் பார்க்கும் புண்ணியவான்கள் தான் பதிலளிக்க வேண்டும்.


சோழர்களினால் முடியாது போனது எதனால்?

Friday, January 14, 2011 · 1 comments

தமிழ் இனத்து மன்னர்களில் பலர் பல்வேறு நாடுகளையும் தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்து அரசாண்டதாக வரலாற்றுப் புத்தகங்களிலும் ஏடுகளிலும் படித்திருக்கின்றோம். தாய்லாந்து, பர்மா, கம்போடியா வரையும் தமிழர்களின் அரசாட்சி பரந்து விரிந்திருந்ததாகவும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் கட்டடக் கலை எச்சங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் அதனை எடுத்துக் காட்டுவதாகவும் பல்வேறு நூல்களும் எடுத்துக் கூறுகின்றன. “கடாரம் வென்ற சோழனவன்….” ஏன ஓர் ஈழத்துப் பாடல் ஒன்றும் கூறுகின்றது.

இவ்வாறெல்லாம் பல தேசங்களிற்கும் சென்று அரசாண்ட தமிழர்களால் ஏன் ஒரு குறுகிய இடத்துடன் மட்டுமே நின்றுகொள்ளவேண்டி இருந்துள்ளது. மேலைத் தேயத்தவர்களைப் போல உலகின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தங்கள் கொடியை நாட்ட ஏன் தமிழ் மன்னர்களினால் முடியாது போனது

சிறுவயதில் வரலாற்றுப் புத்தகங்கள் படிக்கும் போது இக் கேள்வி அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. வெளிநாட்டுப்போரியற் கலைகளிற்கு ஈடுகொடுத்துப் போராட எம் தமிழ் மன்னர்களினால் முடியவில்லை என்பதனால் என்று சிலர் வாதம் முன்வைக்கலாம். அவ்வாறாயின் முன்னேற்றமில்லாத தன் போரியல் நுட்பத்தினால் பல காலமாக பண்டாரவன்னியன் தன் பிரதேசத்தின் இருப்பினை வெள்ளையர்களிடம் இழக்காது பாதுகாத்து வைத்திருந்தானே என என் மனம் திரும்பக் கேட்கும் கேள்விக்கு விடை கிடையாது.

பல காலத்திற்குப் பின்னர் மீண்டும் இக் கேள்விகள் என்னை எட்டிப் பார்த்த போது வீதியில் கொட்டிக் கிடந்த பனிகளின் ஊடாக வானிலை அவதானிப்பு நிலையம் விடுத்திருந்த கடுங்குளிர் எச்சரிக்கையைப் புறக்கணித்தவனாக நடந்து கொண்டிருந்தேன்.

காலையில் வீட்டை விட்டு வெளிக்கிடும் போது வானிலை அவதானிப்புப் பற்றிய அறிக்கையைப் பார்க்காது விட்ட எனது மடத்தனம் அப்போது தெரிந்தது. சாதாரண நிலையில் இருந்த குளிர்நிலை சடுதியாக சுழியத்திற்குக் கீழே கிட்டத்தட்ட பதினாறு பாகை செல்சியஸ் குறைந்திருந்தது. கடின குளிருக்குத் தகுந்த மாதிரி உடையணியாது சாதாரண குளிர் தாங்கும் உடையுடன் வெளியே சென்றிருந்த எனக்கு வீடு திரும்பும் போது போதும் போதும் என்றாகிவிட்டது.

அந்த வேளையில் குளிரில் விறைத்திருந்த மண்டையில் மின்னல் அடித்தது போன்று ஒரு உணர்வு. ஏதோ பலநாள் தொலைத்துவிட்ட பொருள் கைகளில் கிடைத்து விட்டது போன்ற ஒரு மகிழ்வு

இக் குளிர்கால நாட்டில் பல ஆண்டுகளாக வசித்துக் கொண்டிருக்கும் என்னால் இக்குளிரினைத் தாங்க முடியாது இருக்கும் போது எவ்வாறு இக் குளிர்பற்றி நேரடியான அனுபவம் எதுவும் இல்லாத எம் முன்னோடித் தமிழ் மன்னர்களினால் தாங்கியிருக்க முடியும். அந்தக் காலத்தில் தமிழர்களிடம் காணப்பட்ட ஆடையமைப்பு இக் கடும் குளிரினைத் தாங்கும் விதத்தில் அமைந்திருந்ததாக என்னால் அறிய முடியவில்லை

சோழர் இராட்சியம் விரிந்திருந்த இடங்கள்
தமிழ் மன்னர்கள் தங்கள் கொடிகளை நாட்டிய நாடுகள் வெப்பமண்டலத்தின் உள்ளேயே அமைந்துள்ளன. வெப்பமண்டல சூழலிற்கு ஏற்ப உடையணிந்து சென்ற மன்னர்கள், தளபதிகள், மற்றும் போர்வீரர்களினால் குளிர்ப் பிரதேச நாடுகளில் தங்கள் வீரத்தினைப் பதிக்க முடியாது போய்விட்டது. ஆயினும் குளிரினைக் கண்டு பழகிய மேற்கத்தேயவர்களினால் வெப்பப் பிரதேசங்களிலும் தங்கள் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிக்காட்ட முடிந்துள்ளது. பல நாடுகளையும் தங்கள் வசம் கொண்டுவந்து அனைத்துப் பகுதியிலும் இருந்து படைதிரட்டி வந்த மேலைத்தேய நாட்டவர்களிற்கு எமது மன்னர்களைத் தாக்கி எமது பிரதேசங்களை வசப்படுத்துவது இலகுவாய் அமைந்து விட்டது

இதே போன்ற முறையினிலேயே இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியப் படைகள் இரசியப் படைகளிடம் தோல்வியடைந்த சந்தர்ப்பமும் எண்ணங்களில் வந்து போனது.

காலநிலையை மனிதர் வெற்றிகொள்ள முனையினும் ஒரு காலத்தில் ஒவ்வொருவர் வாழ்ந்த காலநிலைச் சூழல் அவர்கள் வெற்றியாளர்களாக மாறக் கைகொடுத்துதவியுள்ளது.   

சிறுவர்களும் உறவினர்களும்

Wednesday, February 24, 2010 · 0 comments

கடந்த சில வாரங்களாக இளையோர் குழுவிற்கு வருகை தந்து கொண்டிருக்கும் அவனிடம் ஏதோ வெளியே சொல்ல முடியாத விடயம் மனதினைக் குடைந்து கொண்டிருந்தது. இருபது வயதின் ஆரம்ப நிலையில் இருக்கும் அவனது நடவடிக்கையைப் சில மாதங்களாகக் கண்காணித்துக் கொண்டிருக்கும் எம்மினால் அதனை இலகுவாகக் கண்டறியக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் யாரிடமும் எதுவும் பேசாது எவருடனும் பழகாது தனித்தே இருப்பான். நாட்டிற்கு மிக அண்மையில் வந்திருந்ததனால் இம் மாற்றம் இருக்கலாம் என எண்ணியிருந்தோம். ஆயினும் இவனது நிலை தொடர்ச்சியாக இவ்வாறு இருப்பதைக் கண்டு அதன் காரணம் அறிய முற்பட்ட எமக்கு அவனது பெற்றோரிடம் இருந்து கிடைத்த தகவல் மேலும் சந்தேகத்தை அதிகரித்தது.



பொதுவாக யாரிடமும் நம்பிக்கைத் தன்மை அற்றவனாக அவன் இருப்பது அவனது பெற்றோரிடம் இருந்து அறியக்கிடைத்தது. இப்படியே அன்றும் ஒருநாள் தனித்திருந்தவனிடம் அவனது நிலை என்ன என்பதை அறியும் பொருட்டு உரையாடலை ஆரம்பித்தேன். கடந்த சில மாதங்களாக எம்முடன் பழகிய விதம், தொழிலிடம், மற்றும் சேவைகள் தொடர்பில் கொண்ட நம்பிக்கையின் ஊடாகத் தன் மனதில் தேங்கிக் கிடந்தவற்றை வெளியே சொல்லி ஆறுதல் தேடிக்கொள்ளும் ஏக்கத்துடன் உரையாடத் தொடங்கினான்.

அவனது உரையாடல் மூலம் எம் சமூகத்தில் வெளித் தெரியவிடாது உற்றார், உறிவினர்கள் என்னும் பாசப் பிணைப்புக்களால் மறைக்கப்படும் விடயங்களில் ஒரு விடயமும் வெளித் தெரியவந்தது. சிறுவர் பாலியல் கொடுமை, சிறுமிகள் அல்ல சிறுவர்கள்.

உரையாடலில் அவனால் கூறப்பட்ட தகவல்:

“சின்ன வயதில இருந்து எனக்கு யாரையும் கண்டா பிடிக்குதில்ல. எல்லாரும் என்னைத் தங்கட சுயநலத்திற்குப் பயன்படுத்திருவாங்கள் எண்டு எனக்குப் பயமா இருக்கு. எனக்குத் தனிய இருக்கணும் போல இருக்கு. ஆக்களோட சேர்ந்து சந்தோசமா இருக்கோணும் எண்டு நினைச்சாலும் என்னால கொஞ்ச நேரத்திற்குப் பிறகு சந்தோசமா இருக்க முடியுதில்ல. அதிலும் குறிப்பாக பெண்களைக் கண்டா என்னால அவங்கள ஒரு மனுசராவே பாக்க முடியுதில்ல. அவங்கள ஒரு பாலியற் பொருளாகத் தான் பாக்க முடியுது. அவங்கட முகத்த நிமிந்து பாக்க முடியல.” இவ்வளவும் கூறியவன் எனது முகத்தையும் நிமிர்ந்து பார்க்கவில்லை!

இதன் பின்னால் இருக்கும் விடயம் என்ன, ஏன் இவனால் சாதாரணமானவனாக இருக்க முடியவில்லை.

நீண்ட உரையாடல்.. ஆயினும் அவனிற்குத் தன் பிரச்சினையை யாரிடமோ சொன்ன மன ஆறுதல்.
அவனிற்கு என்ன நடைபெற்றது.

குடும்பத்தில் மூத்த பிள்ளை. வேலைக்குச் செல்லும் அம்மா மற்றும் அப்பா. இரண்டு சகோதரிகள். தாய் தந்தையர் வேலை சென்று திரும்பும் வரை தாயாரின் சகோதரிகள் இவனிற்கும் இவனது சகோதரிக்கும் பாதுகாவலர்கள்.

ஐந்து வயது வரை இவனைப் பார்த்து வந்தவர்களில் ஒரு சிறிய தாயாரினால் ஆறு வயது அல்லது இவனிற்கு முதன் முதலாய் நினைவில் இருக்கும் காலத்தில் இவன் மீதான பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. சிறு வயது என்ன நடைபெறுகின்றது என்றே தெரியாத நிலை. இது இவனது பதினொரு வயது வரை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வேளையில் இவனது இன்னொரு உறவுக்காரரினாலும் இவன் மீதான பாலியல் கொடூரம் தொடர்கின்றது.

சிறு வயதில் நடைபெற்ற இவ்விடயம் எவ்வாறு இவனிடம் இன்றும் தாக்கம் செலுத்துகின்றது, அதனையும் அவனே விளக்குகின்றான்.

சிறுவயதில் என்னவென்றே தெரியாது பழக்கப்படுத்தப்பட்ட ஒருவிடயம் இடையில் பறிக்கப்பட்ட உணர்வு. அதன் பின்னர் அவனிற்குத் தேவையேற்பட்ட பொழுதில் கிடைக்காத தொடர்பு. இவை அவனை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகின்றன. இதன் காரணமாகத் தனது படிப்பினைக் குழப்புகின்றான். பின்னர் நீண்ட ஒரு போராட்டத்தின் பின்னர் தன் முயற்சியினால் சாதாரண நிலைக்கு வரும் போது புதியதோர் நாட்டிற்கான இடப்பெயர்வு. இவ்வாறு தொடர்ச்சியாக அவனிடம் வந்து சேர்ந்த இடர்கள்.

சிறுவயதில் தன்னை அறியாது தன்மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை காரணமாக அதனை அறிந்து கொள்ளும் பருவத்தில் அறியந்த பின்னர் அதனை மேற்கொண்ட தன் சிறிய தாயிடம் ஏற்பட்ட வெறுப்பு பெண்களை முழுமையாக வெறுப்பதற்கு அடித்தளமிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது அவன் கூறிய இன்னொரு விடயம் மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கது. தன்னால் பெண்களை நேரடியாகப் பார்க்கமுடியவில்லை. அவர்களைக் காணும் போதெல்லாம் தன்னில் கொலைவெறி எழுகின்றது. தன்னைத் தன் சிறிய தாய் தனது உணர்ச்சிக்குப் பாவித்ததைப் போல் அவர்கள் அனைவரையும் நான் பாவிக்கவேண்டும் என்ற உணர்வு தோன்றுகின்றது.


உறவினர்கள் மீது வைத்த நம்பிக்கை, அந் நம்பிக்கையின் மூலம் கிடைத்த சந்தர்ப்பத்தினைத் தவறாகப் பயன்படுத்தியமை என்பன ஒருவனை ஒரு கொடூரமானவனாக வளர்த்தெடுத்திருக்கின்றது. இதன் முக்கிய பங்கினை அவனது பெற்றோர்களும் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டியவர்கள் ஆகிறார்கள்.

ஏனையோரிடம் நம்பிக்கை வைப்பதை விடுத்து தங்கள் குழந்தைகளில் தாங்கள் இல்லாத நேரங்களில் என்ன என்ன மாற்றம் நிகழ்கின்றது என்பதனை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவர்களாகப் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

மேற்கத்தேய நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் செய்திகளில் வரும் போது நாம் அதைக் கவனிக்காது அவர்களது கலாச்சாரம் அப்படிச் செய்ய வைக்கிறது என விட்டுவிடுகின்றோம், ஆனால் எமது மக்களிடம் இவை போன்ற விடயங்கள் மூடி வைக்கப்படுகின்றன. இது பிள்ளைகளின் எதிர்காலத்தை மிக மோசமாப் பாதிக்கும் விடயம்.

வளர்ச்சியடையந்து வரும் நாடுகளில் இவை தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக இல்லாத காரணத்தாலும் சட்டமுறையை விடச் சமூக கலாச்சார கட்டுப்பாடுகளின் கட்டுக்களாலும் இவை வெளித்தெரியாது உள்ளேயே உறைந்து சிறார்களின் வாழ்வினை சீரழித்து விடுகின்றது.

சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களும் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். சிறுமிகளின் மீதான வன்முறை சிறிதளவாவது வெளித்தெரியும் வேளையில் சிறுவர்களின் மீதான வன்முறையானது எமது சமூகத்தில் பாரிள அளவினிலே மறைக்கப்படுகின்றது. இது வன்முறை உணர்வுகள் கொண்ட ஒருவனாக ஒருவனை வளர வழிசமைக்கிறது.

யாராயிருப்பினும் குழந்தைகளின் எதிர்காலம் என்பது பெற்றோர்களின் கையிலேயே முழுமையாகத் தங்கியுள்ளது; குழந்தைகளில் ஏற்படும் மாற்றங்களைச் சரியாகக் கண்டறிந்து கொண்டு அது தொடர்பாக சிரத்தை எடுத்தால் இவ்வாறான சிக்கல்களில் இருந்து பெற்றோர்களால் குழந்தைகளை மீட்க முடியும்.

இதனுடன் தொடர்புபட்ட தகவல்:
கடந்த நவம்பர் மாதம் பிரித்தானிய ஊடகம் ஒன்றில் வெளிவந்த தகவல்

தகவலிற்கு கீழுள்ள இணைப்பிற்குச் செல்லவும்
I was abused by a woman and it haunts me every day

சிறீலங்காவின் பொருளாதாரமும் தமிழரும்

Sunday, November 15, 2009 · 0 comments


கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் போர் நடாத்திவந்த சிறீலங்கா அரசாங்கமானது உலக நாடுகள் முழுவதிலும் கடன் வாங்கிய கடனாளியாக நிற்கின்றது. பெரும் தொகைப் பணத்தினை போரிலே கொட்டிக் குவித்த அரசு அந்நியச் செலவாணியைப் பெறுவதில் பெரும் சிக்கல்களைக் கண்டு வந்திருந்தது.

போர்ச்சூழலால் சுற்றுலாத்துறையும் நெருக்கடியில் இருந்ததனால் இச் சிக்கல் மேலும் அதிகரித்திருந்தது. இருந்த போதிலும் புலம் பெயர்ந்து கணிசமான அளவில் வெளிநாடுகளில் குடியேறிய தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தங்கள் உறவினர்களிற்கு அனுப்பும் பணங்களின் மூலம் சிறிது வருவாயினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அதைப் போலவே இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் ஆரம்பித்த வியாபார நிறுவனங்களிற்குத் தேவையான பொருட்களை சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் சிறீலங்கா அரசானது தனது பொருளாதாரத் தேவையை ஓரளவு பெற்றுவந்தது. இதில் பெரும்பான்மையான நிதிவளமானது தமிழர்கள் மூலமாகவே சிறீலங்கா அரசிற்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குச் செலவளிக்கும் நிதியின் பகுதியைத் தமிழர்களிடமே இருந்து சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பன தமிழ் மக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் விரும்பி வாங்கப்பட்டிருந்தன.

பின்னர் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியினால் சிறீலங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது சிறீலங்காவிற்கு வருவாய் அளிக்கும் பொருட்கள் விற்பனை கணசமான அளவு வீழ்ச்சியடைந்தது.


இலங்கையில் உற்பத்தியான நிருவின் பொருள்
(படத்தின் மேல் click செய்து பெரிதாகப் பார்க்கமுடியும்)

இருப்பினும் இதன் மூலம் வீழ்ச்சியடையும் சிறீலங்காவின் வருமானத்தை தூக்கி நிறுத்துவதற்கு தமிழர் நிறுவனமான 'நிரு பிராண்ட்' சிறீலங்காவிற்கு உதவ முன்வந்துள்ளது. கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந் நிறுவனமானது சிறீலங்கா உற்பத்திகளை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தனது உற்பத்தி என்ற பெயரில் சந்தைப்படுத்துகின்றது.

'யாழ்ப்பாண முறையில் தயாரித்த மிளகாய்த்தூள்' என்று மிளகாய்த்தூள் வியாபாரத்துடன் ஆரம்பித்து பின்பு அரிசிமா, பயற்றம்மா, உழுத்தம்மா என்று விற்பனையைப் பிடித்த இந் நிறுவனமானது தற்போது ஏனைபொருட்கள் விற்பனையிலும் கால்பதித்துள்ளது.

சிறீலங்காவின் மலிபன் நிறுவனத்தின் 'லெபன்பஃப் பிஸ்கேட்' இற்கு அந் நிறுவனத்தின் ஊடாகத் தனது பெயரில் பொதி செய்து ஆரம்பித்து சிறீலங்கா அரச நிறுவனங்களில் ஒன்றான MD இனால் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மற்றும் ஜாம் என்பவற்றிலும் அந் நிறுவனம் ஊடாகத் தனது பெயரில் பெற்று சந்தைப்படுத்தலைச் செய்து வருகின்றது.

தமிழர்களை அழித்து நிற்கும் சிங்கள கொடுங்கோல் அரசினை உலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்துவதற்கும், தமிழர்கள் நலன் பேணுவதற்காக சிறீலுங்கா அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் தமிழர்கள் போராடிவரும் இவ்வேளையில் தமிழர்களின் பணத்தில் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் ’நிரு பிராண்ட்’ நிறுவனமானது அத் தமிழர்களிற்கு எதிரான சிங்கள் அரசுடன் கைகோர்த்துள்ளதைத் தமிழர்கள் இங்கே கவனிக்க வேண்டும்.

கனடா மட்டுமல்லாது குறிப்பிட்டத்தக்க அளவு ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்களிடமும் சந்தையைத் தக்கவைத்திருக்கும் இத் தமிழர் நிறுவனத்தின் இப் பாதகச் செயலை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.

அத்துடன் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாதிருக்க அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபடவேண்டும். அவ்வாறு கவனிக்காது விடுவோமானால் அது பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாய் மாறிவிடும்.  உலகும் எம்மைக் கவனியாது கைகழுவும் நிலை வரும்.


கற்க கசடற - An Education Expo, பதிவுகள் ஆரம்பம்!

Sunday, October 04, 2009 · 0 comments

ஏற்கனவே எனது பதில் கூறியிருந்ததைப் போன்று கனடியத் தமிழ் சமூகத்தின் தேவைகளை முன்வைத்து முதன்முறையாக நடைபெறும் Education Expo பற்றிய மேலதிக விபரங்களுடன் இப்பதிவு:

ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் அறிவூட்டும் நிகழ்வு பற்றி உங்களிற்கு ஏற்கனவே அறியத்தந்திருந்தேன்.

ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வு நடைபெறுகின்றது. காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ள இந் நிகழ்விலே பல பயன்தரும் கல்விசார் விடயங்கள் இடம்பெறவுள்ளன.

இதில் பாலர் பாடசாலையில் இருந்து தரம் 12 வரையுள்ள பாடத்திட்ட விபரங்கள், இவ் வகுப்புகளில் கல்விபயிலும் மாணவர்கள் தொடர்பாகவும் அவர்கள் கல்வித்திட்டம் தொடர்பாகவும் பெற்றோர்கள் அறியவேண்டிய விடயங்கள் தொடர்பான விளக்கங்களும் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

அதுமாத்திரமல்லாது, high school என அழைக்கப்படும் இரண்டாம் நிலைப் பாடசாலையில் எவ்வாறு நேரங்களை ஒழுங்குசெய்வது, எவ்வாறு சோதனைக்கு தயாராவது எப்படிப் பல்கலைக்கழகத்திற்கான பொருளாதார நிலையைக் கவனிப்பது, எவ்வாறான பாடங்களை எப்படித் தெரிவுசெய்வது போன்ற பயனுள்ள தகவல்கள் மாணவர்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

அதேபோல் கனடாவிற்குப் புதிதாகக் குடியேறியோர் எவ்வாறு இக் கல்வித் திட்டத்தினுள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும் என்பது தொடர்பான தகவல்களும் இங்கே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அவ்வாறே வேலைதேடுவது தொடர்பான பயிற்சிகள், தகவல்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு நடாத்தப்படுகின்ற பயிற்சிப் பட்டறைகள் (workshops) இனில் பங்கு பற்றுவதற்கு முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளவேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். இப் பதிவுகள் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி, வெள்ளிக்கிழமை, வரை இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளை இணையத்தளமூடாகவும் (http://www.kalvicanada.org/) , நேரடியாக கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்தில் வாரநாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மேற்கொள்ளமுடியும். கனடியத் தமிழர் பேரவையானது 31 Progress Avenue (Kennedy/Progress), Suite 216 இனில் அமைந்துள்ளது.

பயிற்சிப்பட்டறைத் (workshops) தலைப்புக்கள் - http://kalvicanada.org/program.html

பதிவுகளிற்கு - http://kalvicanada.org/registration.html

இதுபற்றிய மேலதிக விபரங்களை 905-471-8070 என்ற தொலைபேசியில் அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி info@kalvicanada.com






'கற்க கசடற' - Education Expo

Saturday, September 19, 2009 · 0 comments

கற்க கசடற என்னும் ஓர் கல்விக் கண்காட்சி ஒன்று கனடித் தமிழர்களால் கனடியத் தமிழர் வரலாற்றில் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதி நாள்களில் இது நடைபெறும் எனத் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.


இதுபற்றி மேலதிக விபரம் கிடைத்தவுடன் விபரமாகப் பதிவிடப்படும்.

http://www.kalvicanada.com/

புலம்பெயர் நாடுகளும் தமிழர் ஊடகங்களும்.

Tuesday, September 15, 2009 · 0 comments

பிரித்தானிய ஆதிக்கம் நிலவிய காலணித்துவ காலத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தீவுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வேலைவாய்ப்புக்களிற்காக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிறிது காலம் வேலைசெய்த பின்னர் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தனர். அவ்வாறு திரும்பி வராதவர்கள் தாங்கள் சென்ற நாட்டின் வாழ்வுமுறைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர். இவ்வாறு தங்களை அந்தந்த நாடுகளின் வாழ்க்கைமுறைகளில் இணைத்துக்கொண்டவர்கள் மொரிசிஸ், பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் வசித்து வருகின்றார்கள். இலங்கைத் தீவில் வீச்சுக் கொண்ட இனப்பிரச்சினையின் பின்னர் உலக நாடுகளில் தமிழர்களின் பரம்பலானது ஓர் பெரும் வீச்சினை அடைந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் மிகப் பெரும்பகுதியினர் தாங்கள் சென்ற நாடுகளிலே தங்கள் வாழ்வைத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் தாங்கள் வாழும் நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையுடன் வாழ்ந்து வருவதுடன் தங்கள் சமுக கட்டமைப்பையும் பேணக்கூடியவர்களாகவும் தங்கள் தமிழ் மொழி அறிவினைத் தொடர்ந்து பேணி தங்கள் குழந்தைகளிற்கும் வழங்குபவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறே பல்வேறு ஊடக முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாய் மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. குறிப்பாக வேற்றுமொழியில் சரளமாக தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாதவர்களிற்கு இம் முயற்சி மிகச் சிறந்த பயனைக் கொடுக்கும். ஆயினும் இவ்வூடகங்களோ இவ்வாறான மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. பணத்தைப் பெறும் ஒரு வழியாகவே இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழர்கள் ஊடகங்களை நடாத்துகின்றனர். குறிப்பாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களைப் பார்த்தோமேயானால் அவற்றில் தங்கள் தாய்நாட்டுத் தகவல்களையே தொடர்ச்சியாக கூறுகின்றார்கள். புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிற்காக அந்தந்த நாடுகளில் நடாத்தப்படும் இவ்வூடகங்கள் அந் நாடுகளில் நடைபெறும் சமுதாய மாற்றங்களை அல்லது அங்கு வாழும் தமிழர்களில் செல்வாக்குச் செலுத்தும் அல்லது பாதிக்கும் விடயங்களில் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை. தாய்நாட்டுத் தகவல்கள் முக்கியமல்ல என்று இங்கு கூறவில்லை, தாய்நாட்டுடன் தாங்கள் வாழும் நாடு பற்றிய விழிப்புணர்வும் தேவைப்படுகின்றது என்பதனை இவ்வூடகங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தென்னிந்தியச் சினிமாப்பாடல்களும், இலங்கை இந்தியச் செய்திகளும், தென்னிந்தியச் சின்னத்திரைத் தொடர்களுமே இவ்வூடகங்களில் வெளிவருகின்றது. அந்தந்த நாட்டு நிலவரங்களை வெளிக்கொணர வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் கடமை என்பதை அவ்வூடகங்கள் மறந்துவிடக்கூடாது. அவ்வாறு செய்யாது விடின் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் இரண்டு தமிழர் குழுக்கள் உருவாகவும் சமூகம் பற்றிய விழிப்புணர்வு அற்ற ஓர் தமிழ்ச் சமூகமாகவும் நாம் உருமாறும் நிலை ஏற்படும்

தமிழரும் அரசியற் தலைமையும்

Friday, August 28, 2009 · 1 comments

கடந்த மே மாதம் முதல் இடியப்பச் சிக்கலாக உருமாறிய தமிழீழப் பிரச்சினை ஓர் முடிவிற்கு வருவது போன்ற நிலை இதுவரை என் கண்களில் எட்டவில்லை. மாறாக மென்மேலும் இது சிக்கிலான வடிவம் எடுப்பது போன்ற தோற்றப்பாடே என்முன் தோன்றி நிற்கின்றது. பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து 1948ஆம் ஆண்டில் சிங்கள அசாங்களின் கைகளிற்கு இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரம் கைமாறி, தமிழர்களின் சுதந்திரம் அடியோடு மறுக்கப்பட்ட நிலையில் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இவ்வருட ஆரம்பம் வரை தமிழர்கள் தங்கள் உரிமை மீண்டும் பெறப்படப் போகின்றது என்ற நிலை இருந்தது. ஆயினும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பது போன்று தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலு உலக நாடுகளால் நசுக்கப்பட்ட வேளையில் மீண்டும் ஆரம்பித்த இடத்தை விட்டு தமிழர்களின் உரிமைப் போராட்டம் பின்தங்கியுள்ளதாகவே நான் உணருகின்றேன். ஆயுதப் போராட்டக் கருத்து வலுப்பெற்று இளையவர்கள் ஆயுதம் ஏந்திய 70இற்கு முற்பட்ட காலப்பகுதியை நான் ஊடகங்கள் மூலமும் பொத்தகங்கள் மூலமாகவும் பெற்றுக்கொண்ட அறிவினூடா திரும்பிப் பார்க்கின்றேன். பல்வேறு அரசியற் தலைவர்கள்@ தங்களிடம் தங்கள் இனத்தின் தேவைகள் தொடர்பாக ஓர் ஒத்த கருத்தினைக் கொள்ளமுடியாதவர்கள். சிங்கள அரசுகளுடன் தங்களை சமரசம் செய்துகொண்டு தமிழர் உரிமைகளை அடகுவைத்தவர்கள் எனப் பலர். இவர்களின் தமக்குள்ளான சண்டைகளைப் பொறுக்கமுடியாத இளையோர்கள் தாங்கள் அணி திரண்டனர். அவ் இளையோரிற்கும் இம் மூத்த தலைவர்களால் இடையூறுகள். இவற்றிற்கிடையே ஆயுதம் மீது இவ்விளையோர் நம்பிக்கை வைக்கின்றார்கள். பொன். சிவகுமாரன், சிங்களப் படைகளை தன்னந் தனியனான களைப்படையச் செய்கின்றான். தன்கூட தனக்கு கைகுடுக்கும் சிலவேளைகளில் நடுவழியில் விட்டுவிடும் நண்பர்கள் துணையுடன் ஆயுதம் மீது நம்பிக்கை வைக்கின்றான். அவன் வழியில் பிடிப்புக் கொண்டு பின்னாட்களில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. தன் கொள்கையில் உறுதி கொண்ட பொன். சிவகுமாரன் சிங்கள அரசபடைகளின் சுற்றிவளைப்பில் அகப்படும் போது நஞ்சுண்டு தற்கொலை செய்து தன் உறுதியை வெளிப்படுத்தினான். உருப்பெற்ற ஆயுதக் குழுக்கள் தமிழீழ விடுதலையைத் தங்கள் கொள்கையாக வரித்துக் கொண்டு ஆயுத இயக்கங்களாக உருமாற்றம் அடைகின்றன. பின்னர் தலைவர்கள் வழி தவறிய போக்கினைத் தொடர்ந்து ஏனைய இயக்கங்கள் வலுவிழக்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மாபெரும் விடுதலை இயக்கமாக கொள்கைப் பிடிப்புள்ள போராளிகள், தளபதிகள் மற்றும் தலைவர்களுடன் உருமாறியது வரலாறு. இப்படி ஒரு வரலாற்று நிகழ்வினை எம் கண்முன்னே கண்டுவந்த தமிழர் மீண்டும் 70களின் ஆரம்பத்தில் எவ்வாறு மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட எம் தமிழ் தலைவர்கள் பதவிக்காகவும் சொகுசுக்காகவும் அடிபட்டுக்கொண்டார்களோ அவ்வாறே அடிபட்டுக்கொண்டுள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரதேசத்தில் நிலங்களைக் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்களே தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தெளிவாக அடையாளப்படுத்தியும் தலைமையேற்றும் முன்னெடுத்து வந்திருந்தனர். இன்று அவர்களது இராணுவபலம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் இருந்து கொண்டு சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைகளிற்கு எதிராக எதும் செய்ய முடியாத நிலையில் மக்கள் இருக்கும் வேளையில் அவ்வாறான அரசியற் செயற்பாட்டை உலகளாவிய ரீதியில் மிக வேகமாக முன்னெடுத்து தமிழர்களின் பிரச்சினை தீர வழியேற்படுத்த வேண்டிய புலம்பெயர் சமூகமானது தமிழர் பிரச்சினையை மிகவும் சிக்கல்படுத்தி மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு நகர்த்திச் சென்றுகொண்டுள்ளது. இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் இருக்கும் தமிழர் அரசியலில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் அனைவரும் தங்கள் நலன்களை முன்னிறுத்துவது போன்றே எனக்குத் தோன்றுகின்றது. இதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளிற்கு உதவியாக இருந்தவர்கள் முன்னிற்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. அவர்கள் தமக்குள் அணிபிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குழப்பும் மற்றும் வசைபாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இதுவரைகாலமும் தமிழீழ மக்களின் துன்பம் களையத் தாங்கள் பாடுபடுவதாக் கூறியவர்கள் இன்று மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் துன்பச் சுமையைச் சுமக்க மேலும் வலுவற்றவர்களாக இருக்கும் வேளையில் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டியவர்கள் அற்பத்தனமாக நடந்து கொள்கின்றார்கள். இவர்களின் இவ்வாறான செயற்பாடானது இவர்கள் எதற்காக இவ்வளவு காலமும் ஒட்;டியிருந்தார்கள் என்ற கேள்வியை என்னுள் எழுப்புகின்றது. இவ்வாறான இப் பெரியவர்களின் செயற்பாடானது ஓர் முற்றிற்கு வரவேண்டியுள்ளது. இன்று ஈழத்தமிழனம் தனக்காக தமிழர் நலனையே நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த தலைவர்களை இழந்த நிலையில், மீண்டும் ஓர் தலைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இவ்வாறான தலைமைப் பெற்றுக்கொள்வதற்கு ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களாவது கடந்து முடியும் என்பது என் கணிப்பு. இதற்குள் தமிழின அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையும் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு எமக்குள்ளே நாம் குடுமிப்பிடிச் சண்டை செய்துகொண்டிருக்கும் சூழலில் எவ்வாறு இத் தலைமையை அடைவது, இத் தலைமைப் பொறுப்பினை யாரால் வகிக்கமுடியும் எனக் கேள்விகள் எழும் போது அதற்கு விடையாக அமையப்போவது எது. ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களின் பின் ஓர் சிறந்த வலுவான தலைமை அமைந்தால் மட்டும் போதாது, அது தொடர்ச்சியாகச் செயலாற்ற வேண்டும். தனக்குப் பின்னர் தலைமையேற்பதற்கு என தொடர்ச்சியான தலைவர்களை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடைபெறவேண்டுமாயின் இதற்குத் தகுதியானது தற்போது பதினெட்டு வயதிலிருந்து முப்பது வயதிற்குட்பட்ட இளையவர்களினாலேயே முடியும். அதுவும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் உருவாக வேண்டும். இதனை நான் இங்கு குறிப்பிடும் போது அனைவரும் வாய்விட்டுச் சிரிக்கலாம் அல்லது என்னைப் பைத்தியக்காரன் எனலாம். வரலாறு எனது வழிகாட்டி என வாழ்ந்து காட்டிய தலைவனை நான் அடையாளம் காட்டுகின்றேன். பதினாறு வயதில் துப்பாக்கியுடன் புறப்பட்ட அத்தலைவன் முப்பது வயதிலே தமிழீழப் போராட்டத்தின் காவலனாக முப்பத்து மூன்று வயதிலே பொறுப்பேற்கின்றான் (ஏனைய போராட்ட அமைப்புக்கள் தமிழீழ விடுதலை அரங்கில் மக்கள் செல்வாக்கை இழந்து தடைவிதிக்கப்பட்ட காலம்). அதனாலேயே இவ்வாறு ஓர் பலங்கொண்ட அர்ப்பணிப்புக் கொண்ட விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்த முடிந்தது. இளையவர்களிடம் இருந்து அர்ப்பணிப்புள்ளவர்களை, சுயநலம் அற்றவர்களை மற்றும் கொள்கைப் பற்று உள்ளவர்களை இப்போதே அடையாளம் அவர்கள் பின்னால் அணிவகுக்கவேண்டிய கட்டாய கடமைப்பாடு உலகெங்கும் உள்ள தமிழர்களிற்கு உண்டு. முதிர்ந்த தலைவர்களாக இருக்கலாம் ஆயினும் எதிர்கால தமிழ் இனத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இளையோரிடம் தங்கள் தலைமைப் பொறுப்பினை அவர்கள் கைமாற்றவேண்டும். இன்று இக்குறிப்பிட்ட வயதெல்லையில் இருப்பவர்களால் மட்டுமே நிலையான தலைமைத்துவத்தினை நீண்டகாலத்திற்கு வழங்கி தொடர்ந்து தலைவர்களை அடையாளம் காட்ட முடியும். அத்துடன் நீண்டகாலத்திற்கு திறனுடன் செயலாற்ற முடியும் என்பது என் கணிப்பு. அத்துடன் இளையவர்களைச் சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத் தலைவர்களை அடையாளம் காணக்கூடியவாறு இருக்கும். இளையவர்களை முன்னே விட்டுவிட்டு பின்னால் நின்று அதைச் செய்யாதே இதைச் செய்யாதே அல்லது இவ்வாறு தான் இதனைச் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பதை நிறுத்தவேண்டும். தமிழினம் இன்று நிற்கும் இவ் இக்கட்டான நிலையில் இருந்து மீளவேண்டுமாயின் இளைவர்களை அவர்களது வழியில செயற்படவைத்து அவர்களிற்கு பக்கதுணையாக நிற்காவிடின் தமிழினம் மீளாது என்பதுறுதி. எவ்வாறு இளையவர்களால் எழுபதுகளின் முற்பகுதியில் துணிவுடன் அப்போதைய முதிர்ந்த தலைவர்களை எதிர்த்து அனைவரையும் எதிர்த்து சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதைப் போன்றதொரு போராட்டம் அடக்க நினைப்பவர்கள் அனைவரையும் எதிர்த்து முன்னெடுக்கப்படவேண்டும். ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் எதற்காக உயிர்விட்டார்கள். தமிழீழம், தமிழினம் என்றதற்காக மட்டுமே உயிர்விட்டார்கள். தாயிருந்தும் தந்தையிருந்தும் கூடப்பிறந்து வாழ்ந்த சோதரர்கள் தானிருந்தும் அக்கம் பக்கம் அயலிருந்தும் கூடிக் குலாவிய சொந்தமிருந்தும் எதற்காக வெடிசுமந்தார் காரிருள் வேளையிலும் ஆழக் கடல் பரப்பினிலும் கடும்மழைக் குளிரிலிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தேகமெல்லாம் வலிக்கையிலும் எதற்காக வெடிசுமந்தார் வெடியாகிப் போகையிலே – கண்ணெதிரே அம்மா வந்தாலென்ன அப்பா வந்தாலென்ன ஒற்றுமையாய் ஒன்றாக பள்ளிசென்ற தம்பி வந்தாலென்ன தங்கை வந்தாலென்ன நட்பு வந்தாலென்ன மெல்லியதாய் புன்னகைத்து கையசைத்து வார்தையேதும் சொல்லாது சென்றிட்ட கரும்புலிகள் தியாகங்கள் தியாக வேள்விகளில் குளிர்காய்ந்தநாம் இனியேனும் சிறுதுரும்பாவது அசைக்க முயல்வோம். இளையோரின் பின்னாலே அணிவகுத்துத் தயாராவோம்.

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator