Showing posts with label குளிர். Show all posts
Showing posts with label குளிர். Show all posts

சோழர்களினால் முடியாது போனது எதனால்?

Friday, January 14, 2011 · 1 comments

தமிழ் இனத்து மன்னர்களில் பலர் பல்வேறு நாடுகளையும் தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்து அரசாண்டதாக வரலாற்றுப் புத்தகங்களிலும் ஏடுகளிலும் படித்திருக்கின்றோம். தாய்லாந்து, பர்மா, கம்போடியா வரையும் தமிழர்களின் அரசாட்சி பரந்து விரிந்திருந்ததாகவும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் கட்டடக் கலை எச்சங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் அதனை எடுத்துக் காட்டுவதாகவும் பல்வேறு நூல்களும் எடுத்துக் கூறுகின்றன. “கடாரம் வென்ற சோழனவன்….” ஏன ஓர் ஈழத்துப் பாடல் ஒன்றும் கூறுகின்றது.

இவ்வாறெல்லாம் பல தேசங்களிற்கும் சென்று அரசாண்ட தமிழர்களால் ஏன் ஒரு குறுகிய இடத்துடன் மட்டுமே நின்றுகொள்ளவேண்டி இருந்துள்ளது. மேலைத் தேயத்தவர்களைப் போல உலகின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தங்கள் கொடியை நாட்ட ஏன் தமிழ் மன்னர்களினால் முடியாது போனது

சிறுவயதில் வரலாற்றுப் புத்தகங்கள் படிக்கும் போது இக் கேள்வி அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. வெளிநாட்டுப்போரியற் கலைகளிற்கு ஈடுகொடுத்துப் போராட எம் தமிழ் மன்னர்களினால் முடியவில்லை என்பதனால் என்று சிலர் வாதம் முன்வைக்கலாம். அவ்வாறாயின் முன்னேற்றமில்லாத தன் போரியல் நுட்பத்தினால் பல காலமாக பண்டாரவன்னியன் தன் பிரதேசத்தின் இருப்பினை வெள்ளையர்களிடம் இழக்காது பாதுகாத்து வைத்திருந்தானே என என் மனம் திரும்பக் கேட்கும் கேள்விக்கு விடை கிடையாது.

பல காலத்திற்குப் பின்னர் மீண்டும் இக் கேள்விகள் என்னை எட்டிப் பார்த்த போது வீதியில் கொட்டிக் கிடந்த பனிகளின் ஊடாக வானிலை அவதானிப்பு நிலையம் விடுத்திருந்த கடுங்குளிர் எச்சரிக்கையைப் புறக்கணித்தவனாக நடந்து கொண்டிருந்தேன்.

காலையில் வீட்டை விட்டு வெளிக்கிடும் போது வானிலை அவதானிப்புப் பற்றிய அறிக்கையைப் பார்க்காது விட்ட எனது மடத்தனம் அப்போது தெரிந்தது. சாதாரண நிலையில் இருந்த குளிர்நிலை சடுதியாக சுழியத்திற்குக் கீழே கிட்டத்தட்ட பதினாறு பாகை செல்சியஸ் குறைந்திருந்தது. கடின குளிருக்குத் தகுந்த மாதிரி உடையணியாது சாதாரண குளிர் தாங்கும் உடையுடன் வெளியே சென்றிருந்த எனக்கு வீடு திரும்பும் போது போதும் போதும் என்றாகிவிட்டது.

அந்த வேளையில் குளிரில் விறைத்திருந்த மண்டையில் மின்னல் அடித்தது போன்று ஒரு உணர்வு. ஏதோ பலநாள் தொலைத்துவிட்ட பொருள் கைகளில் கிடைத்து விட்டது போன்ற ஒரு மகிழ்வு

இக் குளிர்கால நாட்டில் பல ஆண்டுகளாக வசித்துக் கொண்டிருக்கும் என்னால் இக்குளிரினைத் தாங்க முடியாது இருக்கும் போது எவ்வாறு இக் குளிர்பற்றி நேரடியான அனுபவம் எதுவும் இல்லாத எம் முன்னோடித் தமிழ் மன்னர்களினால் தாங்கியிருக்க முடியும். அந்தக் காலத்தில் தமிழர்களிடம் காணப்பட்ட ஆடையமைப்பு இக் கடும் குளிரினைத் தாங்கும் விதத்தில் அமைந்திருந்ததாக என்னால் அறிய முடியவில்லை

சோழர் இராட்சியம் விரிந்திருந்த இடங்கள்
தமிழ் மன்னர்கள் தங்கள் கொடிகளை நாட்டிய நாடுகள் வெப்பமண்டலத்தின் உள்ளேயே அமைந்துள்ளன. வெப்பமண்டல சூழலிற்கு ஏற்ப உடையணிந்து சென்ற மன்னர்கள், தளபதிகள், மற்றும் போர்வீரர்களினால் குளிர்ப் பிரதேச நாடுகளில் தங்கள் வீரத்தினைப் பதிக்க முடியாது போய்விட்டது. ஆயினும் குளிரினைக் கண்டு பழகிய மேற்கத்தேயவர்களினால் வெப்பப் பிரதேசங்களிலும் தங்கள் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிக்காட்ட முடிந்துள்ளது. பல நாடுகளையும் தங்கள் வசம் கொண்டுவந்து அனைத்துப் பகுதியிலும் இருந்து படைதிரட்டி வந்த மேலைத்தேய நாட்டவர்களிற்கு எமது மன்னர்களைத் தாக்கி எமது பிரதேசங்களை வசப்படுத்துவது இலகுவாய் அமைந்து விட்டது

இதே போன்ற முறையினிலேயே இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியப் படைகள் இரசியப் படைகளிடம் தோல்வியடைந்த சந்தர்ப்பமும் எண்ணங்களில் வந்து போனது.

காலநிலையை மனிதர் வெற்றிகொள்ள முனையினும் ஒரு காலத்தில் ஒவ்வொருவர் வாழ்ந்த காலநிலைச் சூழல் அவர்கள் வெற்றியாளர்களாக மாறக் கைகொடுத்துதவியுள்ளது.   

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator